ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேர்களை தூக்கிலிட்ட ஈரான்: மனித உரிமை அமைப்புகளால் அம்பலம்
2024ல் மட்டும் மொத்தம் 975 பேர்களை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக இரண்டு மனித உரிமைகள் அமைப்பு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
அச்சத்தை ஏற்படுத்தும்
நோர்வே நாட்டில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பும் பிரான்சில் உள்ள மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைவோம் குழுவும் இணைந்து வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர், 2024ல் தான் மிக அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
இந்த எண்ணிக்கை என்பது 2024 ல் ஈரான் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மரண தண்டனையைப் பயன்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், ஈரான் மரண தண்டனையை அரசியல் ஒடுக்குமுறையின் மையக் கருவியாக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது.
மேலும், இந்த மரணதண்டனைகள் என்பது ஈரான் தனது அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள அதன் சொந்த மக்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதி என ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த நிலையில், ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ல் ஈரானில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது 834 என்றே தெரிய வந்துள்ளது. மேலும், 2024ல் தூக்கிலிடப்பட்ட 975 பேர்களில் நால்வர் பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 31 பேர்கள் பெண்கள் என்றும் தரவுகளில் அம்பலமாகியுள்ளது.
உறுதிப்படுத்த முடியவில்லை
2022ல் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் என ஏற்பட்டதன் பின்னர் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நிர்வாகம் மரண தண்டனையை அச்சுறுத்தும் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
1979ல் வெடித்த புரட்சி மேற்கத்திய ஆதரவு பெற்ற ஷாவை வெளியேற்றிய பின்னர் நிறுவப்பட்ட ஷரியா அடிப்படையிலான நீதித்துறை அமைப்பின் முக்கிய தூணாக மரண தண்டனை உள்ளது.
மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் குற்றங்களும் அடங்கும். சமீபத்திய ஆண்டுகளில், பெரும்பாலும் சிறைச்சாலை வளாகங்களில் ஆனால் எப்போதாவது பொது இடங்களில் தூக்கிலிடுவதன் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு ஈரான் அதிக மரணதண்டனைகளை நிறைவேற்றியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன.
2024 ல் கூடுதலாக 39 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வந்ததாகவும், அவற்றை இரண்டாவது ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆண்டு பிறந்து இரண்டு மாதங்கள் நிறைவடையும் முன்னர் ஈரானில் 121 பேர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |