இந்தியா, சீனா உட்பட 4 நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணையில் விதிவிலக்கு: ஈரான் அறிவிப்பு
Iran Grants Access in Hormuz for india, china, iraq, qatar: ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டில் இருந்து இந்தியா, சீனா உட்பட 4 நாடுகளுக்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் 4 நாடுகளுக்கு விதிவிலக்கு
ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய 4 நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் மற்றும் சமீபத்திய அமெரிக்க இடைக்காலத் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளுக்கு மத்தியில் ஈரான் அரசு சார்பு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தகவலை ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகாதம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அனுமதிக்கப்பட்ட இந்த 4 நாடுகளும் அமெரிக்க படைகளின் தலையீடு இன்றி கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப் பாதையை கடக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உறுதி செய்வதற்காக இந்தியாவிற்கும், சீனாவுடனான அரசியல் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கு சீனாவிற்கும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகின் முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கத்தார், பிராந்திய போக்குவரத்திற்கான அவசியமான ஒத்துழைப்பாக பார்க்கப்படுவதால் கத்தாருக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஈரானின் பாதுகாப்பு விவகாரங்கள் ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் நெருங்கி இருப்பதால் ஈராக்கிற்கும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.