அலி காமெனியின் இளைய மகனை புதிய உயர் தலைவராக அறிவித்த ஈரான்: ட்ரம்பின் மிரட்டல்
மொஜ்தபா காமெனியை அவரது தந்தை அலி காமெனிக்குப் பிறகு உயர் தலைவராக நியமித்ததாக திங்களன்று ஈரான் அறிவித்துள்ளது.
உயர் தலைவர் பொறுப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து முன்னெடுத்தப் போருக்கு ஒரு வாரத்திற்குப் பிறகும், ஈரான் கடும்போக்காளர்களின் கட்டுப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்குள் செல்வாக்கு மிக்க ஒரு நடுத்தர பதவியில் இருக்கும் மதகுருவான மொஜ்தபா, உயர் தலைவர் பொறுப்புக்கு வரும் முன்னணி நபர்களில் ஒருவராகக் காணப்பட்டார்.
ஈரானின் புதிய தலைவரைத் தெரிவு செய்யும் பொறுப்பில் உள்ள 88 மதகுருமார்களைக் கொண்ட ஒரு அமைப்பே தற்போது மொஜ்தபாவை தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு தீர்க்கமான வாக்கெடுப்பின் மூலம், நிபுணர்கள் சபை, ஆயத்துல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி காமெனியை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புனித அமைப்பின் மூன்றாவது தலைவராக நியமித்தது என ஈரான் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தப் பதவி, இஸ்லாமியக் குடியரசின் அனைத்து அரசு விடயங்களிலும் மொஜ்தபாவுக்கே இறுதி அதிகாரத்தை அளிக்கிறது. மொஜ்தபாவின் நியமனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபத்தை தூண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அவர் குறிப்பிடுகையில் ஈரானின் உயர் தலைவர் தெரிவில் அமெரிக்காவின் கருத்தும் கோரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

வெனிசுலாவில் மதுரோவிற்கு பிறகு ஒரு ஜனாதிபதியை அமெரிக்கா பரிந்துரைத்தது போன்ற ஒரு நடவடிக்கையை ட்ரம்ப் ஈரானிடம் எதிர்பார்த்திருக்கலாம்.
எங்களிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றால், அவர் நீண்ட காலம் நீடிக்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் ABC செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.
முதன்மை இலக்காக
இஸ்ரேல் தன் பங்கிற்கு, ஈரான் யாரைத் தெரிவு செய்தாலும், அவர் எங்களின் முதன்மையான இலக்காக இருப்பார் என மிரட்டல் விடுத்திருந்தது.

பிப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையில், முதல் நாளிலேயே மொஜ்தபாவின் தந்தை அலி காமெனி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 1,332 ஈரானிய பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிபந்தனையற்ற சரணடைதலுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஈரான் ஒருபோதும் போர் நிறுத்தத்தை நாடவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்பது உறுதி என்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசாங்கம் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தும் என்றும் ஈரானின் ஆட்சியாளர்களை இரக்கமின்றித் தாக்கும் என்றும் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |