10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்..அதை விட மோசமானது இந்தப்போர் - ஈரான் ஜனாதிபதி பகிரங்கம்
ஈராக் போரை விட ஐரோப்பிய நாடுகளுடனான போர் மோசமானதாக இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அணுஆயுத பதட்டங்கள்
அணுஆயுத பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பில் ஈரான் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஈரான் தனது அணுசக்தி திறன்களை மீண்டும் கட்டியெழுப்ப முயன்று வருவதுதான்.
இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) ஊடகம் ஒன்றிடம் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.
ஈராக் போரை விட மோசமானது
அதில் அவர், "நாங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு முழு அளவிலான போரில் இருக்கிறோம்; எங்கள் நாடு நிலையானதாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. உன்னிப்பாகப் பார்த்தால், இது மிகவும் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருக்கிறது" என்றார்.

அதே சமயம் 1980 முதல் 1988 வரை ஈராக்குடன் நடத்திய மோசமான போரையும் அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகளுடனான போர், ஈராக் எங்களுக்கு எதிராக தொடுத்த போரை விட மோசமானது.
அந்தப் போரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், மேற்கத்திய நாடுகளுடனான மோதல் அதனை விட இன்னும் வியத்தகு முறையில் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.

வலிமையான நிலை
மேலும், பெசெஷ்கியன் தனது சமீபத்திய கருத்துக்களில், ஜூன் மாதம் ட்ரம்ப் நடத்திய தாக்குதல்களின் தாக்கத்தை நிராகரித்தார்.
அத்துடன் "ஈரானின் இராணுவம் மோதலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது ஒரு வலிமையான நிலைக்கு மீண்டெழுந்துள்ளது. நமது அன்புக்குரிய இராணுவப் படைகள் தங்கள் பணிகளை வலிமையுடன் செய்து வருகின்றன.
இப்போது, நாம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் மீறி, உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தின் அடிப்படையில், அவர்கள் தாக்கப்பட்டபோது இருந்ததை விட வலிமையாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தாக்க விரும்பினால், இயல்பாகவே அவர்கள் ஒரு மிகவும் உறுதியான பதிலடியை எதிர்கொள்வார்கள்" என்றும் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |