உலகம் இதுவரை அறிந்திராத புதிய ஆயுதம்... அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ஈரான்
இந்த வாரத் தொடக்கத்தில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன்களை வீழ்த்துவதற்காக, ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்தியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
அராஷின் பெயரால்
அமெரிக்காவின் 16 முதல் 30 மில்லியன் டொலர் மதிப்பிலான அந்த உயர் ரக ரீப்பர் ட்ரோன்களை உலகின் எந்த நாடுகளின் உதவியும் இல்லாமல் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட Arash-e-Kamangir அமைப்புகளால் வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரான் வெளியிட்டுள்ள தகவல் உண்மையாக இருந்தால், புகழ்பெற்ற ஈரானிய வில்லாளன் அராஷின் பெயரால் அழைக்கப்படும் அந்தப் பாதுகாப்பு அமைப்பின் முதல் போர்க்களப் பயன்பாடாக இது அமைந்துள்ளது.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் மாதக்கணக்கில் போர் நீடித்து வந்தபோதிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை முறியடிக்கும் தனது இராணுவத் திறனை ஈரான் சற்றும் குறையாமல் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதையே இது குறிக்கிறது.
நாட்டின் வான்பரப்பையும் கடல் எல்லைகளையும் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையின் கீழ், பிராந்தியக் கடல் பரப்பிற்கு மேலே அந்த ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஈரான் வெளியிட்டுள்ள தகவல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், சுயாதீனமாகச் சரிபார்ப்பதற்கு கடினமான இராணுவ முன்னேற்றங்களை ஈரானிய அதிகாரிகள் நீண்ட காலமாகப் பகிரங்கப்படுத்தி வந்தாலும்,
தற்போது வெளியாகியுள்ள புதிய ஆயுதம் தொடர்பிலான தகவல்கள் நம்பத்தகுந்ததாகவே உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனெனில், எளிதில் கண்டறியக்கூடிய பெரிய நிலையான ரேடார் தளங்களைச் சார்ந்திருக்காமல், ட்ரோன்கள் மற்றும் விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மலிவான, எளிதில் நகர்த்தக்கூடிய மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளில் ஈரான் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.
வான் பாதுகாப்பு அமைப்பு
ஈரான் பல்வேறு வகையான ஏவுகணை வடிவமைப்புகளில் கணிசமான அளவு தன்னிறைவு அடைந்துள்ளது; மேலும் உக்ரைனைப் போலவே, போர்க்காலத்தில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதிலும் அந்த நாடு சாமர்த்தியமாகச் செயல்பட்டு வருகிறது.
ஈரானுக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்க, ஒரு அம்பை எய்ததாக நாட்டுப்புறக் கதைகளில் விவரிக்கப்படும் பாரசீகப் புராண நாயகன் ஒருவரின் பெயரே, இந்தப் புதிய ஆயுத அமைப்பிற்குச் சூட்டப்பட்டுள்ளது.
இது ஒரு புதிய, புரட்சிகரமான ஆயுதமாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், நகர்த்தக்கூடிய மற்றும் குறைந்த செலவிலான வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் பரவலாக ஏற்றுக்கொண்டுவரும் செயல்முறையில், இது மற்றொரு படியாகும்.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஈரானின் சில சிறிய பாதுகாப்பு அமைப்புகள், எதிரிகளின் ட்ரோன் அல்லது விமானம் தங்கள் வான்பரப்பில் அத்துமீறும் வரையில், வானில் வட்டமிட்டுக் காத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகிறது.
மேலும், கண்காணிப்பே தங்களின் முதன்மை நோக்கம் என்பதால், மெதுவாக நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் போன்ற ட்ரோன்கள், ஈரானிய பாதுகாப்பு அமைப்புக்கு எளிதான இலக்காக அமைகின்றன என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |