ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு வரி - எத்தனை கோடி தெரியுமா?
ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு 2 மில்லியன் டொலர் வரி விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஹார்மோஸ் நீரிணை
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் தொடங்கியதில் இருந்து, ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதனை மீறி கடக்க முயற்சித்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

அதேவேளையில் சில கப்பல்களை மட்டும் அனுமதித்த ஈரான், எங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்க நாடுகளின் கப்பல்களை இந்த பாதையில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த பாதை வழியே நடைபெறுவதால், இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பல்வேறு நாடுகள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
ஹார்மோஸ் நீரிணையை திறக்க நட்பு நாடுகள் போர் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்க எந்த நாடுகளும் முன்வரவில்லை.
அதைத்தொடர்ந்து ஹார்மோஸ் நீரிணையை திறக்க வேண்டும் என ஈரானுக்கு 20 நாடுகள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், 48 மணி நேரத்தில் ஹார்மோஸ் நீரிணையை திறக்கவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது பாரிய தாக்குதல்களை நிகழ்த்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், ஹார்மோஸ் நீரிணையை நிரந்தரமாக மூடுவோம், மேலும், இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்களையும், அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்களையும், அமெரிக்கர்கள் பங்குதாரர்களாக உள்ள பொருளாதார, தொழில்துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
2 மில்லியன் டொலர்
அதேவேளையில், ஹார்மோஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் திட்டத்தையும் ஈரான் நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

இதற்காக ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ18.8 கோடி) வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய ஈரான் எம்.பி அலாதீன் போரூஜெர்டி, "பல தசாப்தங்களுக்குப் பிறகு அந்த நீரிணையில் ஈரான் ஒரு புதிய இறையாண்மை ஆட்சியை நிறுவியுள்ளது. நீரிணையைக் கடக்கும் சில கப்பல்களிடமிருந்து போக்குவரத்து கட்டணமாக 2 மில்லியன் டொலர் வசூலிப்பது ஈரானின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

இப்போது, போருக்குச் செலவுகள் இருப்பதால், இயல்பாகவே நாம் இதைச் செய்ய வேண்டும். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து போக்குவரத்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
கப்பல்கள் கூடுதலாக ரூ.18.8 கோடி செலுத்தி வந்தால் அதன் மூலம் வரும் பொருட்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |