இன்னும் தாக்குதல் தொடங்கினால்... கடுமையான பதிலடி உறுதி என அச்சுறுத்தல் விடுத்த ஈரான்
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்தால், அதன் நிலைகள் மீது மிக மோசமானத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கூறியதுடன், ஹார்முஸ் நீரிணை மீதான தங்களது உரிமைக் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார மந்தநிலை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகியும், அந்த முக்கிய கடல்வழிப் பாதை மூடப்பட்டே உள்ளது. இதனால், உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

இது உலகளாவிய எரிபொருள் விலைகளை கடுமையாக உயரச் செய்துள்ளதுடன், பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயங்கள் குறித்த கவலைகளையும் அதிகரிக்க செய்துள்ளது.
மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்காத நிலையில், ஏப்ரல் 8 முதல் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்க கடற்படை விதித்த முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் இன்னும் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ஈரானைக் கட்டாயப்படுத்துவதற்காக, தொடர்ச்சியான புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அன்று ஒரு விளக்கத்தைப் பெறவிருக்கிறார்.
மிக மோசமானத் தாக்குதல்
ஆனால் அப்படியான தகவல் கசிந்ததும் எண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை ஒரு கட்டத்தில் ஒரு பேரலுக்கு 126 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. பின்னர் அது சுமார் 114 டொலராகச் சரிந்தது.
இதனிடையே, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து விரைவான முடிவுகளை எதிர்பார்ப்பது நியாயமல்ல என்று ஈரான் வெளிவிவகார அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் வியாழக்கிழமை மாலை தெரிவித்தார்.

மட்டுமின்றி, ஈரானின் புரட்சிக் காவலர் படையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு புதிய தாக்குதலும், அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கூட, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது மிக மோசமானத் தாக்குதல்களுக்கு அது வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |