அலி காமெனி மீதான தாக்குதல் போர்ப் பிரகடனமாக கருதப்படும்: ஈரான் எச்சரிக்கை
நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் போர்ப் பிரகடனமாகவே கருதப்படும் என்று ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் முயற்சி
அலி காமெனியை படுகொலை செய்யவோ அல்லது நிர்வாகத்தில் இருந்து அகற்றவோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிப்பதாக ஊகங்கள் எழுந்ததற்கு வெளிப்படையான பதிலாக இது கருதப்படுகிறது.

சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள பெசெஷ்கியான், நமது நாட்டின் மாபெரும் தலைவர் மீது நடத்தப்படும் தாக்குதல், ஈரானிய தேசத்துடனான ஒரு முழு அளவிலான போருக்குச் சமமாகும் என்றார்.
கடந்த இரண்டு வாரங்களாக ஈரானை உலுக்கிய போராட்டங்களுக்கும், அதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மரணமடைந்ததற்கும் அமெரிக்காவே காரணம் என்று ஈரான் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
ஈரானிய மக்களின் வாழ்வில் துன்பங்களும் நெருக்கடிகளும் இருக்குமானால், அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் விதித்துள்ள நீண்டகால விரோதப் போக்கும் மனிதாபிமானமற்ற தடைகளுமே என அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை Politico பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், காமெனியின் ஏறக்குறைய 40 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய ஜனாதிபதி ட்ரம்ப்,
காமெனியை ஒரு மோசமான நபர் என குறிப்பிட்டதுடன், தன் நாட்டைச் சரியாக ஆள வேண்டும் என்றும் மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்தார்.
ஈரானில் சமீபத்திய அமைதியின்மை அலை டிசம்பர் 28 அன்று தொடங்கியது. விண்ணை முட்டும் பணவீக்கம், சரிந்து வரும் நாணய மதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் மீதான பரவலான கோபம் தலைநகர் தெஹ்ரானிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கும் தீயாகப் பரவியது.

வெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர் போராட்டமாகவும் கலவரமாகவும் வெடித்தது. இந்த நெருக்கடி வலுப்பெற்றதைத் தொடர்ந்து, ஈரானிய நிர்வாகம் ஜனவரி 8 ஆம் திகதி இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளை ஏறக்குறைய முழுமையாக முடக்கி, தகவல் தொடர்புகளைத் தடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.
இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பது உறுதி என்ற செய்திகள் பரவி வந்த நிலையில், ட்ரம்ப் ஈரானியர்களைத் தொடர்ந்து போராடுமாறும், அரசாங்க அமைப்புகளைக் கைப்பற்றுமாறும் வலியுறுத்தி, அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதாகவும் கூறி, அப்பாவி மக்களைத் தூண்டி விட்டார்.
புதன்கிழமை ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் தயாரான நிலையில், அதிகரித்து வரும் பிராந்திய மற்றும் தூதரக அழுத்தங்களுக்கு மத்தியில், தமது திட்டத்தை ஒத்திவைக்க ட்ரம்ப் முடிவு செய்தார்.

அமெரிக்கா கைவிடுவதாக
மேலும், அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், ஈரானின் பதிலடிக்கு தாங்கள் தயாரல்ல என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ட்ரம்பை எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது.
அத்துடன், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தற்போது கைவிடுவதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும், போராட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 800 பேர்களை ஈரான் தூக்கிலிடப்போவதாக பரவியத் தகவலை சுட்டிக்காட்டி, ஈரான் இதைக் கைவிட்டால், தாக்குதலை அமெரிக்கா கைவிடும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
பின்னர் ஈரான் அறிவித்த முடிவுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். இருப்பினும், அலி காமெனி ஈரானின் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஜனாதிபதி பெசெஷ்கியான் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |