பிராந்தியத்தில் அமெரிக்க முதலீடுகள் மீது... ஈரானிய மதகுரு ஒருவர் கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்க தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் தொடர்புடைய முதலீடுகளை குறிவைக்கக்கூடும் என்று ஈரானிய மதகுரு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு டிரில்லியன் டொலர்
அமெரிக்காவிடம் ஈரானை நோக்கிச் செல்லும் ஒரு பெரும் படைப்பிரிவு இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், போராட்டக்காரர்களைக் கொல்வதற்கோ அல்லது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கோ எதிராக ஈரானுக்கு அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நீங்கள் இந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்துள்ள ஒரு டிரில்லியன் டொலர்கள் எமது ஏவுகணைகளின் கண்காணிப்பில் உள்ளன என்று முகமது ஜவாத் ஹாஜ் அலி அக்பரி தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் எந்த முதலீடுகளைக் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. இதற்கிடையில், ஈரானின் தலைமை சட்டத்தரணி முகமது மொவஹேதி, சமீபத்திய நாடு தழுவிய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 800 பேரின் மரண தண்டனைகளை ஈரான் ரத்து செய்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை மறுத்துள்ளார்.
ட்ரம்பின் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது, அப்படி ஒரு எண்ணிக்கை இல்லை, நீதித்துறையும் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றார்.

திட்டம் எதுவும் இல்லை
முன்னதாக, அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடந்த வாரம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்,
ஈரானிடம் போராட்டக்காரர்களைத் தூக்கிலிடும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார். இதனிடையே, ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அதிர்ச்சியூட்டும் வன்முறை குறித்து விவாதிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வெள்ளிக்கிழமை அன்று ஒரு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது.

2022-ஆம் ஆண்டிலிருந்து ஈரானின் மதகுருமார்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாக விளங்கிய இந்த அமைதியின்மையின் போது, வழிப்போக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |