ஈரானியப் பாடகியின் அந்தச் செயல்... விதிக்கப்பட்ட 74 கசையடிகள் தண்டனை
யூடியூப் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடிய ஈரானியப் பாடகி ஒருவருக்கு 74 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐவர் கைது
பரஸ்தூ அஹ்மதி என்ற 29 வயது இசைக்கலைஞர், 2024 டிசம்பரில் பார்வையாளர்கள் யாரும் இல்லாத ஒரு அரங்கில், தனக்குத் துணையாக இசைக்கும் நான்கு பேர் கொண்ட இசைக்குழுவுடன் நேரலையில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

அஹ்மதி, நீண்ட கருப்பு நிற கையில்லாத ஆடையை அணிந்து, ஹிஜாப் இல்லாமல் 'அஸ் கூனே ஜவானனே வதன்' என்ற தேசபக்திப் பாடலைப் பாடியுள்ளார்.
அஹ்மதி வெளியிட்டுள்ள அந்தக் காணொளி உலகமெங்கும் பல மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. ஆனால் ஈரான் நிர்வாகம் அஹ்மதி உட்பட ஐவரையும் கைது செய்து, பின்னர் விடுவித்தது.
அந்த வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அதிகாரிகள் முறைப்படி வழக்கு பதிவு செய்தனர்; நீதிமன்ற ஆவணங்களின்படி, அஹ்மதி மற்றும் அவரது இசைக்குழுவினருக்கு கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
அத்துடன், இரண்டு வருட பயணத் தடை மற்றும் இரண்டு வருட காலத்திற்கு கலை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் தனியாகப் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஈரானிய நாடாளுமன்றத்தால் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட, ஹிஜாப் மற்றும் கற்பொழுக்கம் தொடர்பான புதிய மற்றும் கடுமையான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தண்டனைக்குரியதாக அமைந்துள்ளது.

அதாவது, 12 வயதுடைய சிறுமிகள் உட்பட அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும்; இல்லையெனில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |