காத்திருங்கள், பதிலடி உறுதி... இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரானின் IRGC
ஹிஸ்புல்லாவின் இராணுவத் தலைவரை இஸ்ரேல் கொன்றதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காட்டுமிராண்டித்தனம்
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு முறையான பதிலடி அளிக்கப்படும் என்றும், காத்திருங்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹெய்தம் அலி தப்தபாய் என்பவர் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டார். நவம்பர் 2024ல் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட மிக மூத்த ஹிஸ்புல்லா தளபதி இவர் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் அரசு செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை IRGC வன்மையாகக் கண்டிப்பதாக கூறியது.
மேலும் கொல்லப்பட்ட தப்தபாய்க்காக பழிவாங்க ஹிஸ்புல்லா, ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுத அமைப்புகள் அனைத்திற்கும் உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.
உரிய நேரத்தில் இஸ்ரேல் மிக மோசமான பதிலடியை எதிர்கொள்வது உறுதி என்றும் IRGC எச்சரித்துள்ளது. முன்னதாக திங்கட்கிழமை, ஈரானின் வெளிவிவகார அமைச்சகமும் இந்த தாக்குதலைக் கண்டித்தது, இது நவம்பர் 2024 போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்றும், லெபனானின் தேசிய இறையாண்மையை கொடூரமாக மீறும் செயல் என்றும் கூறியது.

ஈரானை நேரடியாக
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிற்குப் பிறகு இஸ்ரேல் இராணுவம் லெபனானுக்குள் பலமுறை தாக்குதல்களை நடத்தியது, ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் அவர்களின் இராணுவ உள்கட்டமைப்பை குறிவைப்பதாகவே விளக்கமளித்து வருகிறது.
ஈரானைத் தனது முக்கிய ஆதரவாளராகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுடனான அதன் சமீபத்திய மோதலால் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.

மட்டுமின்றி, சிரியாவின் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சியும் அந்த அமைப்பை நெருக்கடிக்கு தள்ளியது. இந்த பின்னடைவுகள் அனைத்தும் ஈரானை நேரடியாக பாதித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 நாள் போரின் போது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |