பிரித்தானியர் உட்பட வெளிநாட்டவர்கள் மீது ஐ.எஸ் திடீர் தாக்குதல்: கொத்து கொத்தாக சடலங்கள்
மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் மீது திடீரென்று ஐ.எஸ் பயங்கரவாத குழு முன்னெடுத்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மொசாம்பிக் பகுதியில் அமைந்துள்ள பால்மா நகரிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஹொட்டல் ஒன்றில் இருந்து பிரித்தானியர்கள் உட்பட பலர் 17 வாகனங்களில் வெளியேறிய நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது மாயமாகியிருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே, சிறார்கள் உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 5 நாட்கள் நீடித்த தாக்குதலானது ரத்தக்களரியாக மாறியது எனவும் தகவல் வெளியானது.
மட்டுமின்றி, பலர் ஐ.எஸ் அமைப்பின் பிடியில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில், பலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேரில் பார்த்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹொட்டலில் இருந்து வெளியேறிய 17 வாகனங்கள் மீது தாக்குதல் முன்னெடுத்த நிலையில், பிரித்தானியர் ஒருவர் தப்பிக்க முயன்றதாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
தற்போது பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்க நாட்டவர்கள் உட்பட 40 பேர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பினால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட பகுதியானது 14 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆபிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாகும்.
தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டல் அறிவித்துள்ளது.