உக்ரைன் ஊடுருவலிலிருந்து பின்வாங்குகிறாரா புடின்?
உக்ரைன் படைகளின் போரிடும் திறன் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதால், இனி டான்பாஸ் பகுதி மீது மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
டான்பாஸ் என்பது பெருமளவில் ரஷ்ய மொழி பேசுவோர் வாழும் உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாகும். நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டான்பாஸ் பகுதியில், ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் உக்ரைன் படைகளுடன் 2014ஆம் ஆண்டு முதலே சண்டையிட்டு வருகிறார்கள். அப்பகுதியில் வாழும் பலரும், ரஷ்யாவுக்கே தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில், டான்பாஸ் பகுதியில் குறைந்தபட்சம் 14,000 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.
உக்ரைன் படைகளின் போரிடும் திறன் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதால், உக்ரைனை மேலும் ஊடுருவுவதை குறைத்துவிட்டு டான்பாஸ் பகுதி மீது கவனம் செலுத்த இருப்பதாக ரஷ்யா கூறினாலும், உண்மையில் ரஷ்யா தனது 120 படைப்பிரிவுகளில் 20 படைப்பிரிவுகளை இழந்துவிட்டதாக மேற்கத்திய நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனால்தான் புடின் பின்வாங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
அத்துடன், இது உக்ரைனின் கிழக்குப் பகுதியில், உக்ரைன் படைகளை சுற்றி வளைக்க ரஷ்யா செய்யும் சூழ்ச்சியாக இருக்கலாம் என்றும் மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
காரணம், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. நேற்று கூட, மத்திய உக்ரைனிலுள்ள Vinnytsia நகர் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக Kyiv அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.