இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தை!
காசா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேலிய படைகள் காசாவில் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தி, பாரிய தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கத்தாரில் மீண்டும் தொடங்கியுள்ளன.
முன்னதாக, காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக அறிவித்தது.
மேலும், இஸ்ரேலிய ராணுவம் "விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெருமளவிலான துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பி வருவதாகவும்" தெரிவித்திருந்தது.
பேச்சுவார்த்தைக்கு தயாரான ஹமாஸ்
போர் நிறுத்தம் ஏற்படாத வரையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஹமாஸ் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டார்.
இருப்பினும், இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் படைகளின் அணிதிரட்டல் காரணமாக, ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் தற்போது "ஒரு மேசையில் அமர்ந்து இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், இராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை தோஹாவில் போர் நிறுத்தத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக ஹமாஸ் தரப்பு வட்டாரங்கள் ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |