பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஆவலுடன் காத்திருந்த உறவினர்களுக்கு ஒரு ஏமாற்றம்: இஸ்ரேல் தகவல்
காசாவில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் இன்று முதல் விடுவிக்கப்படுவார்கள் என அவர்களுடைய உறவினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள்
அக்டோபர் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், பலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
அவர்களை மீட்க, கத்தார் முதலான சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அவ்வகையில், சில பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ABS-CBN News
பிணைக்கைதிகள் சிலரை ஹமாஸ் விடுவிப்பது என்றும், அதற்கு பதிலாக, இஸ்ரேல் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வது என்றும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், காசாவிலிருந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் இன்று, அதாவது, வியாழக்கிழமை துவங்கும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சரான Eli Cohen தெரிவித்திருந்தார்.
50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதித்துள்ள நிலையில், முதல் தவணையாக, இன்று சில பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என Cohen தெரிவித்திருந்தார்.
பிணைக்கைதிகள் இன்று விடுவிப்பு இல்லை
ஆனால், எதிர்பாராதவிதமாக, இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள், அதாவது, போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை வரை அமுலுக்கு வராது என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
AFP
எதனால் இந்த தாமதம் என்பதை இஸ்ரேல் அதிகாரிகள் விளக்கவில்லை. என்றாலும், இஸ்ரேல் பாலஸ்தீன ஒப்பந்தத்தில், இதுவரை ஹமாஸ் தரப்பினரும், மத்தியஸ்தம் செய்யும் கத்தார் தரப்பினரும் கையெழுத்திடவில்லை என இஸ்ரேல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், இன்று தங்கள் உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிணைக்கைதிகளின் உறவினர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |