முடிவுக்கு வந்தது 15 மாதம் நீண்ட கொடூரமான போர்... விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
கடுமையான பேரிழப்புகளையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா போரில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளர்.
இஸ்ரேல் படைகள் வெளியேறும்
பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றியெரியும் நிலைக்கு தள்ளப்பட்ட 15 மாத போர் முடிவுக்கு வருகிறது. காஸா போர் நிறுத்தம் தொடர்பிலான ஒப்பந்தம் முறைப்படி தற்போது அறிவிக்கவில்லை என்றாலும்,
அடுத்த 6 வார காலம் முதற்கட்ட போர் நிறுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இந்த காலகட்டத்தில் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும் என்றும், ஹமாஸ் படைகள் பிடியில் எஞ்சியுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும்,
அத்துடன் இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களும் விடுவிக்கப்படுவார் என முதன்மையான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவுடன், எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மட்டுமின்றி, ஜோ பைடன் அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேறவிருக்கும் சில நாட்களுக்கு முன்னர் இந்த ஒப்பந்தமானது அமுலுக்கு வருகிறது. ஹமாஸ் படைகள் தரப்பில் தெரிவிக்கையில், அதன் பிரதிநிதிகள் குழு, போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்புதலை மத்தியஸ்தர்களிடம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு ஹமாஸ் வாய்மொழி ஒப்புதல் அளித்திருந்தது, இறுதி எழுத்துப்பூர்வ ஒப்புதலை வழங்க கூடுதல் தகவலுக்காகக் காத்திருந்தது என்றார்.
இதனிடையே, இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Gideon Saar தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தம் குறித்த பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் அரசாங்க வாக்கெடுப்புகளில் பங்கேற்க இரவோடு இரவாக இஸ்ரேலுக்குத் திரும்ப இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இந்த ஒப்பந்தம் தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் அரசாங்கம் வியாழக்கிழமை வாக்களிக்க உள்ளது. 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லையில் ஊடுருவிய ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்பட 1200 பேர்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு பாழான நிலமாக
250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் படைகள் கடத்தினர். இந்த சம்பவத்திற்கு பதிலடி அளிக்கும் வகையில் காஸா மீது போர் தொடுத்த இஸ்ரேல் பெண்கள், சிறார்கள் உட்பட 46,000 பாலஸ்தீன மக்களை கொன்று தள்ளியது.
அத்துடன் காஸாவை இடிபாடுகளால் ஆன ஒரு பாழான நிலமாக மாற்றியது. மட்டுமின்றி, உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் கடும் குளிரில் வெட்டவெளியில் கூடாரங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
உணவு, குடிநீர், மருத்துவ உதவி உட்பட மனிதாபிமான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கியது. மேலும், காஸாவுக்கு எதிரான போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியது, லெபனான், ஈராக் மற்றும் ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற குழுக்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ஹமாஸ் படைகளின் முதன்மையான தலைவர்கள் பலரையும் கொன்றதன் பின்னர் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |