என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்... கர்நாடகா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் கோரிக்கை
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள குகை ஒன்றில் வெளிநாட்டுப் பெண்ணொருவர் பிள்ளைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்...
சமீபத்தில், கர்நாடகாவிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ரோந்து சென்ற பொலிசார், அங்கு ஒரு குகைக்குள் வெளிநாட்டவரான ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
ரஷ்ய நாட்டவரான அந்தப் பெண்ணின் பெயர் மோஹி என்னும் நினா குட்டினா (40). மோஹியுடன், அவரது மகள்களான ப்ரேயா (6) மற்றும் அமா (4) ஆகிய இருவரும் அந்த குகைக்குள் இரண்டு வாரங்களாக தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
ஆம், அந்தக் குழந்தைகளின் தந்தையும், இஸ்ரேல் நாட்டவருமான ட்ரோர் (Dror Goldstein) என்பவர், தனக்கு தன் பிள்ளைகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
தானும் நினாவும் 2017ஆம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் சந்தித்தாகத் தெரிவித்துள்ள ட்ரோர், தாங்கள் இருவரும் இந்தியாவில் ஏழு மாதங்களும் பின்னர் உக்ரைனில் சில காலமுமாக மொத்தம் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
தங்கள் பிள்ளைகளில் ஒரு பிள்ளை இந்தியாவில் பிறந்ததாக தெரிவித்துள்ள ட்ரோர், தான் தன் பிள்ளைகளுக்காக தொடர்ந்து பணம் அனுப்பிவருவதாகவும், தன் விசா அனுமதித்தபடி ஆண்டுக்கு ஆறு மாதங்கள் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்துவருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நினாவை ரஷ்யாவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவங்கியுள்ள நிலையில், தன் இளைய மகள் இந்தியாவில் பிறந்ததால் அவள் இந்தியக் குடிமகள் என்றும், அவளை ரஷ்யாவுக்கு நாடுகடத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார் அவர்.
மேலும், தான் தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிட விரும்புவதாகவும், ஆனால், தான் தன் பிள்ளைகளை சந்திப்பதை நினா விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
2025ஆம் ஆண்டு தான் ஒரு அவசர வேலையாக இஸ்ரேலுக்குச் சென்றதாகவும், உடனடியாக இந்தியா திரும்பமுடியவில்லை என்றும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், நினாவும் பிள்ளைகளும் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் படித்தவுடன் உடனடியாக பெங்களூர் சென்றதாகவும், அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நானும் நினாவும் சேர்ந்து வாழ்ந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவேண்டுமென்றால் எல்லோரும் சேர்ந்துவாழ வேண்டும் என நினா வற்புறுத்துகிறார்.
எனக்கு எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்வதில் உடன்பாடில்லை. நான் என் இரண்டு பிள்ளைகள் வாழ்க்கையில்தான் பங்கெடுக்க விரும்புகிறேன் என்கிறார் ட்ரோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |