அக்டோபர் படுகொலையைத் திட்டமிட்டவர்... பழி தீர்த்துக் கொண்டதாக அறிவித்த இஸ்ரேல்
காஸா மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அக்டோபர் 7 படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஹமாஸ் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹத்தாத் முழு பொறுப்பு
வெள்ளிக்கிழமை மாலை இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸும் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸின் காஸம் படைகளின் தலைவராவார் இஸ் அல்-தின் அல்-ஹத்தாத். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் பொதுமக்கள் மற்றும் IDF வீரர்களின் கொலை, கடத்தல் மற்றும் காயங்களுக்கு ஹத்தாத் முழு பொறுப்பு என்றும் நெதன்யாகு மற்றும் காட்ஸ் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.
ஆனால், ஹத்தாத் கொல்லப்பட்டது தொடர்பில் இதுவரை ஹமாஸ் தரப்பில் இருந்து மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை. மே 2025-இல் தளபதி முகமது சின்வாரை இஸ்ரேல் கொன்ற பிறகு, காஸா பகுதியில் ஹமாஸ் படைகளின் இராணுவத் தலைவரானார் ஹத்தாத்.
வெள்ளிக்கிழமையன்று காஸாவில் குறைந்தது இரண்டு தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்தது. அவற்றில் ஒன்று அல்-ஹத்தாத்தை இலக்காகக் கொண்டிருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பழி தீர்க்கும்
பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சராயா கள மருத்துவமனை மற்றும் ஷிஃபா மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் ட்ரம்பின் தலைமையில் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையிலும், காஸா மீது இஸ்ரேல் தினசரி தாக்குதல் மற்றும் வன்முறைகளை முன்னெடுத்து வருகிறது.

அக்டோபர் தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலுக்கு 850 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 7 தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக இஸ்ரேல் தொடர்ந்து பழி தீர்க்கும் என்று நெதன்யாகுவும் காட்ஸும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
2023-ஆம் ஆண்டில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸாவில் 72,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |