போர்நிறுத்தம் ஒரு பக்கம்... காஸாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்
இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காஸாவில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு பாலஸ்தீனக் குழந்தை கொல்லப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸா குடும்பங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் போர்நிறுத்தம் என கூறப்படும் நடவடிக்கை அமுலில் இருக்கும் நிலையிலும் காஸா பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதுடன், இந்த போர்நிறுத்தத்தை ஒரு கொடூரமான மற்றும் உயிர்க்கொல்லி மாயை என்றே யுனிசெஃப் விவரிக்கிறது.

போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 2025 முதல், குறைந்தது 265 பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பால் வரையறுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காலகட்டத்தில், எட்டு மாதங்களுக்கும் மேலாக சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு பாலஸ்தீனக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இஸ்ரேலியத் தாக்குதல்களிலிருந்து பாலஸ்தீனக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பயனற்ற தன்மையை, தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, உலகம் தொடர்ந்து போர்நிறுத்தம் குறித்துப் பெருமையாகப் பேசி வரும் வேளையில், காஸாவில் உள்ள குடும்பங்கள் தங்கள் மகன்களையும் மகள்களையும் தொடர்ந்து அடக்கம் செய்து வரும் அவலம் நீடிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்புக்குள், பாடசாலையில், பொது இடங்களில் மட்டுமல்ல, கால்பந்து விளையாடும்போதோ அல்லது மீன் பிடிக்கும்போதோ உட்பட காஸாவில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக எல்டர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில்... 2 வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்; 13 வயது சிறுவன் ஒருவன் தனது கூடாரத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டான்; 5 வயது சிறுவனும் அவனது தந்தையும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டனர் - இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என எல்டர் தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் அமைப்பின் தகவலின் அடிப்படையில், அக்டோபர் மாதம் முதல் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்; இவர்களில் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்டர் தெரிவிக்கையில், உயிரிழந்தவர்களுடன் அந்த துயரம் முடிந்துவிடுவதில்லை. 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்; அவர்களில் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
கவலையடையச் செய்ய வேண்டும்
இஸ்ரேலின் மஞ்சள் கோடு மற்றும் ஆரஞ்சு கோடு என அழைக்கப்படும் ஆக்கிரமிப்பு எல்லைகள் தொடர்ந்து மெல்ல மெல்ல விரிவடைந்து வருவதைக் குறிப்பிட்டு, ஆரஞ்சு கோட்டிற்கு அருகில் தும்மினால் கூட நீங்கள் சுடப்படலாம் என்று எல்டர் விமர்சித்துள்ளார்.

மேலும், தனது கூடாரத்திற்குள் இருந்த 12 வயது சிறுமி ஒருவர் மார்பில் சுடப்பட்ட சம்பவத்தையும், வீட்டிற்குள் இருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் குவாட்காப்டர் ட்ரோன் (quadcopter drone) ஒன்றிலிருந்து பாய்ந்த குண்டு முகத்தில் பட்டு காயமடைந்த சம்பவத்தையும் அவர் உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அவசரமாக மருத்துவ வெளியேற்றம் தேவைப்படுவதாகவும், அதேவேளையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள், காயமடைந்த குழந்தைகளிடையே நோய்த்தொற்றுகள், சிக்கல்கள் மற்றும் உறுப்பு நீக்க அறுவை சிகிச்சைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் எல்டர் எச்சரித்தார்.
அத்துடன், போர்நிறுத்தத்தின் போதும் தொடர்ந்து நிகழும் குழந்தைகள் உயிரிழப்புகள், சர்வதேச சட்டத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவரையும் கவலையடையச் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
இதனிடையே, மார்ச் 2-ஆம் திகதி இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்ததிலிருந்து லெபனானில் 247 குழந்தைகள் கொல்லப்பட்டும், 992 குழந்தைகள் காயமடைந்தும் உள்ளதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவித்துள்ளதையும் எல்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அக்டோபர் 7, 2023 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை போரில் குறைந்தது 73,018 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும், 173,273 பேர் காயமடைந்தும் உள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையில் அக்டோபர் 11-ஆம் திகதி போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1,007 பேர் கொல்லப்பட்டும், 3,165 பேர் காயமடைந்தும் உள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; அதேவேளை, முன்னர் அனுமதி மறுக்கப்பட்டிருந்த பகுதிகளிலிருந்து மீட்புக் குழுவினர் 784 உடல்களை மீட்டெடுத்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |