ஈரானில் எந்த நேரத்திலும் அமெரிக்க இராணுவத் தலையீடு: அதி உயர் எச்சரிக்கையில் இஸ்ரேல்
ஈரானில் எந்த நேரத்திலும் அமெரிக்க தலையீடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இஸ்ரேல் அதி உயர் எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிர்வாகம்
ஈரான் நிர்வாகம் பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்க, இஸ்ரேல் உளவு அமைப்புகள் இருக்கலாம் என்றே ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால், ஈரான் முழுவதும் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
ஈரானின் 31 மாகாணங்களிலும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய நாட்களில் ஈரான் போராட்டங்களில் அமெரிக்க நிர்வாகம் தலையிடக் கூடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை அச்சுறுத்தி வந்துள்ளார், மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பலவந்தத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஈரான் ஆட்சியாளர்களையும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் அதி உயர் எச்சரிக்கை நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இஸ்ரேலின் அதி உயர் எச்சரிக்கை நிலைப்பாடு நடைமுறையில் எதைக் குறிக்கிறது என்பதை அதிகாரிகள் தரப்பு வெளிப்படுத்தவில்லை.

இஸ்ரேலிய வட்டாரங்கள்
ஜூன் மாதம் இஸ்ரேலும் ஈரானும் 12 நாள் போரில் ஈடுபட்டன, அதில் அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதனிடையே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோவும் ஈரானில் அமெரிக்காவின் தலையீடு சாத்தியம் குறித்து தொலைபேசியில் விவாதித்ததாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இருவரும் பேசியதை ஒரு அமெரிக்க அதிகாரியும் உறுதிப்படுத்தினார், ஆனால் அவர்கள் என்ன விவாதித்தனர் என்பதை அவர் கூறவில்லை.

ஈரானில் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் அந்நாட்டில் தலையிடும் முடிவுக்கு வரவில்லை என்றே கூறுகின்றனர். ஆனால், இஸ்ரேலைத் தாக்கினால் ஈரான் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கும் என்று பிதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், ஈரானில் தற்போதுள்ள சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |