ட்ரம்பின் ஈரான் ஒப்பந்தத்திற்கு அடுத்த சிக்கல்... புதிய கோரிக்கையுடன் இஸ்ரேல்
ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு சில மணி நேரங்களேயான நிலையில், புதிய கோரிக்கையுடன் இஸ்ரேல் களமிறங்கியுள்ளது.
கையெழுத்திட்ட மறுநாளே
தெற்கு லெபனானில் தனது படைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த அனுமதிக்குமாறு, இஸ்ரேல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நெருக்கமான ஒரு மூத்த அதிகாரி உட்பட இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதை தெரிவித்துள்ளனர்.
லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தும் இடைக்கால ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட மறுநாளே இஸ்ரேல் அதிகாரிகள் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு மார்ச் 2 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தெற்கு லெபனான் மீதான தனது படையெடுப்பை விரிவுபடுத்தியது.
அத்துடன், ஹிஸ்புல்லாவை வேரறுப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு கடுமையான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுள்ளது.
பிடிவாதமான பேச்சுவார்த்தை
மேலும், லெபனான், காஸா மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பிரதேசங்களை, தங்களுக்கும் தங்கள் எதிரிகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மண்டலங்கள் என இஸ்ரேல் விளக்கமளிக்கிறது; இது இஸ்ரேலின் சமீபத்திய பாதுகாப்புக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாகும்.
மட்டுமின்றி, எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அந்தப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
ஈரானின் கோரிக்கைகளை புறந்தள்ளும் வகையில், தெற்கு லெபனானில் தனது படைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் இஸ்ரேல் பிடிவாதமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவே அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், லெபனானின் லிற்றானி நதிக்குத் தெற்கே உள்ள பகுதியில் படைகளை நிலைநிறுத்தியிருப்பது உள்ளிட்ட தனது நிலைப்பாடுகளில் இருந்து இஸ்ரேல் பின்வாங்காது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் கடைப்பிடிக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தி, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க முடிவு செய்கிறாரா என்பதைப் பொறுத்தே பேச்சுவார்த்தைகளின் முடிவு இறுதியில் அமையும் என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |