துருப்புகளை திரும்ப பெற தொடங்கியது இஸ்ரேல்: கொல்லப்பட்ட 13 பாலஸ்தீனியர்கள்
இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு மேற்கு கரையில் உள்ள ஜெனின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து படைகளை இஸ்ரேல் திரும்ப பெற தொடங்கியுள்ளது.
2 நாட்களாக நடைபெறும் மோதல்
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீன பயங்கரவாதிகளின் கோட்டை என கருதப்படும் ஜெனின் முகாம்களில் இருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக திங்கட்கிழமை அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Sky News
பாலஸ்தீனம் மீதான இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதலாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது, இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள தகவலில் இஸ்ரேல் காசா பகுதியில் 5 ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.
Reuters
13 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இஸ்ரேல் இரண்டு நாட்களாக நடத்தி வரும் இந்த தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த ராணுவ நடவடிக்கையின் போது 1 இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Sky News
வெளியேறும் இஸ்ரேல் படைகள்
இந்நிலையில் பாலஸ்தீனின் ஜெனின் அகதிகள் முகாம் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், இரண்டு நாள் நடவடிக்கை புதன்கிழமையான இன்று முடிவுக்கு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜெனின் அகதிகள் முகாம் பகுதிகளில் இருந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு வெளியேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |