இஸ்ரேலின் இறுதி நாட்கள்... 5 ஆண்டுகளில் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய ஈரான் தலைவர்
இஸ்ரேலின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டதாக கூறியுள்ள ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஹமாஸ் மற்றும் ஹவுதி படைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வெற்றிபெறாது
கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலை பொது சேவை என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் உள்ள மசூதி ஒன்றில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் அயதுல்லா அலி கமேனி பேசியுள்ளார். அப்போது ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் எப்போதும் வெற்றிபெறாது என்றார்.
அப்போது அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என முழக்கமிட்டது, வானைப் பிளந்தது. அயதுல்லா அலி கமேனியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.
இஸ்ரேலின் முதன்மையான இலக்காக தற்போதும் அயதுல்லா அலி கமேனி நீடிக்கிறார் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்கு உக்கிரமான பதிலடி உறுதி என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது.
அயதுல்லா அலி கமேனி தமது உரையின் இடையே, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். நஸ்ரல்லா தற்போது நம்மோடு இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அவரது ஆன்மாவும் அவரது கொள்கையும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்றார்.
வேரோடு பிடுங்கப்படும்
சியோனிச எதிரிக்கு எதிராக துணிச்சலாக நடவடிக்கை முன்னெடுத்தவர் என்றும் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார். மேலும், நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி குறித்து சியோனிஸ்டுகளும் அமெரிக்கர்களும் கனவு காண்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. சியோனிச அமைப்பை தரையில் இருந்து வேரோடு பிடுங்கப்படும், அதற்கு வேர்கள் இல்லை, அது போலியானது, நிலையற்றது மட்டுமின்றி அமெரிக்க ஆதரவின் காரணமாக மட்டுமே அது நீடிக்கிறது என்றார்.
கடைசியாக கடந்த 2020 ஜனவரி மாதம் இதுபோன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் அயதுல்லா அலி கமேனி பேசியுள்ளார். ஈரானின் முதன்மை தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானி படுகொலையை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது.
அதன் பின்னர் தற்போது தான் அயதுல்லா அலி கமேனி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |