இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை
Israel Would Not Exist If I Did Not Stop Iran: ஈரானை நான் தடுத்திருக்காவிட்டால், இஸ்ரேல் இருந்திருக்காது.
இஸ்ரேலும் மத்திய கிழக்கும் தப்பிப்பிழைத்ததற்குத் தான் தான் காரணம் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை பெருமை பேசியுள்ளார்.
தடுத்திருக்காவிட்டால்
தனக்கே உரிய தற்பெருமைப் பாணியில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தான் தடுத்திருக்காவிட்டால், இஸ்ரேலும் முழு மத்திய கிழக்கும் மொத்தமாக அழிந்திருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஈரான் மீது மீண்டும் ஒரு வலுவானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களின் மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை நான் தடுத்திருக்காவிட்டால், இஸ்ரேலும், உண்மையில் முழு மத்திய கிழக்குமே இன்று இருந்திருக்காது. இதைச் சொல்ல யாரும் விரும்புவதில்லை, ஆனால் இது உண்மை என்று அனைவருக்கும் தெரியும் என ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் தப்பிப்பிழைத்ததற்குத் தன்னைத்தானே ட்ரம்ப் பாராட்டிக்கொள்வது இது முதல் முறையல்ல. ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் உடனான ஒரு நேர்காணலில் அவர், வெளிப்படையாகச் சொல்வதானால், நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இல்லாவிட்டால், இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்று கூறியிருந்தார்.
ஜூன் மாதம் ஓவல் அலுவலகத்தில் பேசிய அவர், ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், இஸ்ரேலும் இருக்காது, மத்திய கிழக்கும் இருக்காது என்று கூறினார்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கான உதவி குறித்த அமெரிக்கக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட இருப்பதாக தகவல் வெளியான சில நாட்களில் ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.

2018-ல் தொடங்கிய 10 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வருகிறது. இஸ்ரேலுக்கு அந்த உதவி தேவையில்லை என்பதால், இந்த ஆண்டுடன் அந்த உதவி நிறுத்தப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், இது தன்னிச்சையான முடிவு என இஸ்ரேல் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலை உருவானதைத் தொடர்ந்தே ட்ரம்பிடம் இருந்து இப்படியான முடிவு வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்ற இடைத்தேர்தலைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளன.
மீண்டும் தொடங்குவது
ஈரானுடனான போரின் காரணமாக குடியரசுக் கட்சி பின்னடைவை எதிர்கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், உண்மையில் அவ்வாறு நடந்திருக்கலாம் என்றார்.
ஈரான் மீது தான் தாக்குதல் நடத்தியதற்கான முதன்மைக் காரணம் அணு ஆயுதங்களே என்று ட்ரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இது பல வருடங்களாக, இஸ்ரேல் கூறி வரும் குற்றச்சாட்டு என்றும், அதில் உண்மை இருந்ததில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.
நவம்பர் 1 அன்று அயோவாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அவர், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுத்து நிறுத்தினேன் என குறிப்பிட்டதுடன், அது எவ்வாறு நடந்தது என்பதை விளக்க மறுத்தார்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களில், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்த தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் பலமுறை மாற்றிக்கொண்டார்.
இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய நாள், வாக்கெடுப்புக்குப் பிறகு தாக்குதல்களைத் தொடரத் திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்கப்பட்டபோது, அவர் நேரடியாக இல்லை என்றே பதிலளித்தார்.
வியாழக்கிழமை அன்று, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், அது குறித்து விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.