டமாஸ்கஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல்: அதிகரிக்கும் பிராந்திய பதற்றம்
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இஸ்ரேல் துல்லியமான தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பிராந்தியத்தில் வாழும் ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உறுதியான நிலைப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுடன் இணைந்து நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், "டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இஸ்ரேல் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.
டமாஸ்கஸுக்கு தெற்கே சிரிய படைகள் நிலைநிறுத்தப்படுவதையோ அல்லது ட்ரூஸ் சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தல் ஏற்படுவதையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பது சிரிய அரசாங்கத்திற்கு நாங்கள் விடும் தெளிவான எச்சரிக்கை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தத் துல்லியமான தாக்குதல்கள், டிசம்பரில் பஷர் அல்-அசாத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்துள்ள சுன்னி இஸ்லாமிய குழுக்கள் குறித்து இஸ்ரேல் கொண்டுள்ள ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றன.
உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்டுள்ள ஒரு நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்கும் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவுக்கு இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் மேலும் சிக்கலை உருவாக்குகின்றன.
பிராந்திய பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், இஸ்ரேலின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |