இதே நிலை நீடித்தால் 7 ஆண்டுகள் வரை ஆகலாம்: கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்
தற்போதைய அதே விகிதத்தில் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டால், கொரோனா பெருந்தொற்றை மொத்தமாக ஒழிக்க 7 ஆண்டுகள் வரை ஆகலாம் என புதிய ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகம் மொத்தமும் நாளுக்கு 4.5 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பொதுமக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை 119.8 மில்லியன் டோஸ்கள் உலகம் மொத்தமும் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு 1.3 மில்லியன் டோஸ்கள் என்ற விகிதத்தில் இதுவரை 8.7 சதவீத பொதுமக்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் 6-வது இடத்தில் இருந்தாலும் அமெரிக்கா 2022-ல் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவை அனைத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் தோன்றிய கொரோனா வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகிறதா என்பதைப் பொறுத்தது என்றே கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்வரிசையில் உள்ளது இஸ்ரேல்.
மொத்தமுள்ள மக்கள் தொகையில் 58.5 சதவீத மக்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி நாளுக்கு 135,778 டோஸ் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு அளிக்கப்பட்டும் வருவதாக தெரிய வந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் சிறிய தீவான சீஷெல்ஸ் உள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 38.6 சதவீத மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு விட்டது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள், அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் சராசரி 11.8 சதவீத மக்களுக்கு தடுப்பூசி அளித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 15.7 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் மருந்தை அளித்துள்ளனர். மேலும், நாளுக்கு 438,421 டோஸ் மருந்துகள் வரை பொதுமக்களுக்கு பிரித்தானியா அளித்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் என்றே நம்பப்படுகிறது.
உலகம் மொத்தம் இதுவரை 9 வகையான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை தற்போது வீரியம் மிக்க மாற்றம் கண்ட புதிய கொரோனா தொற்றை தடுத்து செயல்பட்டால் மட்டுமே முழுமையான எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.