புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்ட வழக்கு... ஐரோப்பிய நாடொன்றின் துணைப் பிரதமர் விடுவிப்பு
100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை படகுடன் கடத்திய குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினியை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
கிட்டத்தட்ட மூன்று வாரங்கள்
புலம்பெயர் மக்களின் வருகையை தடுக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக, 2019ல் அவர் புலம்பெயர் மக்களின் படகு ஒன்றை கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடலில் முடக்கியிருந்தார்.
தற்போது மூன்றாண்டுகள் நீடித்த இந்த வழக்கு விசாரணையில், சல்வினிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டத்தரணிகளின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
தீவிர வலதுசாரி லீக் கட்சியின் தலைவரான மேட்டியோ சல்வினி, ஜார்ஜியா மெலோனியின் அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றி வருகிறார். தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சல்வினி, லீக் வென்றது, இத்தாலி வென்றது, இது குற்றமல்ல, எங்கள் உரிமை என்றார்.
நாடுகடத்தும் இத்தாலி
புலம்பெயர் மக்களை அல்பேனியாவுக்கு நாடுகடத்தும் இத்தாலி அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் கேள்வி எழிப்பியுள்ள நிலையில், சல்வினி மீதான இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
2019ல் ஸ்பானிய தொண்டு நிறுவனத்தால் இத்தாலிக்கு கொண்டுவரப்பட்ட 147 புகலிடக் கோரிக்கையாளர்களின் படகை அப்போது உள்விவகார அமைச்சராக இருந்த சல்வினி தடுத்து நிறுத்தியுள்ளார்.
புலம்பெயர் மக்களின் படகுகளுக்கு இத்தாலியின் துறைமுகங்களில் அனுமதி இல்லை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |