லெபனான் மீதான தாக்குதலை தொடரும் இஸ்ரேல் - இத்தாலி எடுத்த அதிரடி நடவடிக்கை
இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்தம் செய்வதாக இத்தாலி அறிவித்துள்ளது.
லெபனானை தாக்கும் இஸ்ரேல்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் லெபனானிற்கு பொருந்தாது எனக்கூறி, லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

லெபனானில் இயங்கும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை குறி வைத்து தாக்குவதாக இஸ்ரேல் கூறும் நிலையில், இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனது ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஈரான் நிபந்தை விதித்த நிலையிலும், இஸ்ரேல் தாக்குதலை தொடர்கிறது.
நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்குச் சென்றுள்ள இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி, "பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இத்தாலியின் ஆதரவைத் தெரிவிக்கும் ஒரு முயற்சியே தனது பயணம்" என தெரிவித்துள்ளார்.

இத்தாலி நடவடிக்கை
இந்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் லெபனானில் தனது தாக்குதலைத் தொடர்வதால், இஸ்ரேல் உடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே காசா மீதான இஸ்ரேலின் குண்டு வீச்சு காரணமாக இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இத்தாலி நிறுத்தி வைத்துள்ளது.
இஸ்ரேலின் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் வரை நீண்டு, லெபனானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்ட லிட்டானி நதி வரையிலான அனைத்து லெபனான் பகுதிகளையும் காலவரையின்றி ஆக்கிரமிக்க உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 6 லட்சம் லெபனான் குடியிருப்பாளர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அந்த மண்டலத்திற்குள் உள்ள லெபனான் கிராமங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும் கூறினார்.
இதனால், லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வாய்ப்பில்லாத சூழலில், லெபனான் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை களைவதை மையமாக கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |