உலகின் நீளமான தொங்குபாலத்தை கட்டும் ஐரோப்பிய நாடு
உலகின் நீளமான தொங்குபாலத்தை கட்டுவதற்கு ஐரோப்பிய நாடொன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தாலி
ஐரோப்பிய நாடான இத்தாலி, மெசினா ஜலசந்தியின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு திட்டமிட்டு வந்தது.
பூகம்ப அச்சுறுத்தல், மாபியா அச்சறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு 13.5 பில்லியன் யூரோ(இந்திய மதிப்பில் ரூ.1.37 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்து, இத்தாலி அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த பாலம் சிசிலி தீவையும் இத்தாலியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில், மெசினா ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட உள்ளது.
உலகின் நீளமான தொங்கு பாலம்
3.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த பாலம், பயன்பாட்டிற்கு வரும்போது உலகின் நீளமான தொங்கு பாலம் என்ற பெருமையை பெறும்.
இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி, அடுத்த ஆண்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாலம் 2032 அல்லது 2033 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அந்த பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
பூகம்ப அச்சுறுத்தல் உள்ள பகுதியில் கட்டப்படும் இந்த பாலம், பூகம்பம் வந்தாலும், உறுதியாக இருக்கும் வகையில் கட்டப்பட உள்ளது.
குறையும் பயண நேரம்
ஒரு மணி நேரத்தில் 3000 கார்கள் செல்லும் வகையில், 3 கார் பாதைகளுடன் கட்டப்பட உள்ளது. படகு மூலம் ஜலசந்தியை 100 நிமிடத்தில் தற்போது கடந்து வரும் நிலையில், கார் மூலம் 10 நிமிடங்களில் கடக்க முடியும்.
நாளொன்றுக்கு 200 ரயில்களும் செல்லும் வகையில் இரட்டை ரயில் பாதையுடன் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. இதன் மூலம், 2 மணி நேர ரயில் பயண நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகள், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையிட்டுள்ளனர்.
தற்போது துருக்கியில் உள்ள கனகாலே பாலம் 2.023 கிலோ மீட்டர் நீளத்துடன் உலகின் நீளமான தொங்குப்பாலமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |