சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி
பல ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் அல்லது சமீபத்திய ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மற்றொரு மோதல் வெடிக்கக்கூடும் என நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய ஏவுகணை
சீனா தொடர்ந்து இந்தப் பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. அது தைவான் ஜலசந்தியாக இருந்தாலும் சரி, பசிபிக் பெருங்கடலாக இருந்தாலும் சரி, ஜப்பான் கடலாக இருந்தாலும் சரி, சீனக் கடற்படை இந்தப் பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, தைவான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
அத்துடன் சீனாவுடன் அமெரிக்காவின் உறவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை, இரு நாடுகளும் கிடைக்கும் வாய்ப்புகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போட்டியில் முந்தத் தவறுவதில்லை.
இந்த நிலையில் சீனாவின் இராணுவ முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, மற்ற ஆசிய நாடுகள் நிலைமையைச் சமாளிக்க தங்கள் மூலோபாய கூட்டாண்மையை அதிகரித்து வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான், சீனாவின் கடலோரப் பகுதிகளை அடையக்கூடிய புதிய ஏவுகணைகளை எந்த இடத்திலிருந்து நிலைநிறுத்த முடியும் என்பது குறித்த விவரங்களை வழங்கும் ஒரு வரைபடத்தை செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்டது.
அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ள பகுதியில் இருந்து சீனாவை ஜப்பான் தாக்கினால், அது அதன் கடற்படைக் கப்பல்களை எளிதாக குறிவைத்துவிடும் என்றே அஞ்சப்படுகிறது.
செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜப்பான், டைப் 12 ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை சீனாவின் கடற்கரையின் எல்லைக்குள் உள்ள தளங்களில் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான தீவான கியூஷு
இந்த ஏவுகணை 621 மைல்கள் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது, அதாவது இது சீனாவின் முக்கிய நகரங்களை அடைந்து முக்கியமான தளங்களை அழிக்க முடியும். டைப் 12 ஏவுகணையானது ஜப்பானுக்கு அதன் பரம எதிரியான சீனாவை எதிர்த்தாக்குவதற்கு நிலையான பாதுகாப்பு திறனை வழங்குகிறது.
மேலும், டைப் 12 ஏவுகணையின் மேம்படுத்தல் என்பது, ஜப்பான் தனது வெளிப்புற தீவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியாகும். கூடுதலாக, ஜப்பான் தனது போர் விமானங்களை விரைவாக புறப்படச் செய்வதற்காக அதன் இரண்டு போர்க்கப்பல்களையும் மேம்படுத்தி வருகிறது.
தற்போது சீனாவை குறிவைக்கும் இந்த தளம் ஜப்பானின் தெற்கே உள்ள பிரதான தீவான கியூஷுவில் அமைந்துள்ளது. குறிப்பாக, கிழக்கு சீனக் கடல் கியூஷுவின் மேற்கில் அமைந்துள்ளது.
இந்த தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டைப் 12 போன்ற ஏவுகணைகளால், சீனாவின் கிழக்கு கடற்கரையை குறிவைக்க முடியும். இந்த ஏவுகணைகள் நடப்பு நிதியாண்டிற்குள் நிலைநிறுத்தப்படும் என்றும், இது தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 31, 2026 ல் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானின் தென்மேற்கு தீவுகளுக்கு அருகே தனது கடற்படை பிரசன்னத்தை தீவிரப்படுத்தியுள்ள சீனாவிற்கு எதிரான ஒரு தடுப்பாக செயல்படுவதே அவர்களின் நோக்கமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |