பதவி விலகுவதாக அறிவித்த பிரதமர்! எந்த நாட்டில் தெரியுமா?
கொரோனா விவகாரத்தைக் கையாண்டதில் எழுந்துள்ள விமா்சனங்களையடுத்து ஜப்பான் பிரதமா் பதவியிலிருந்து விலக யோஷிஹிடே சுகா முடிவு செய்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறிய பிரதமா் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga),
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆளும் லிபரல் டெமோக்ராடிக் கட்சியை (Liberal Democratic Party) வழிநடத்தும் பொறுப்பு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலவில்லை.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவிருப்பதால் கட்சித் தலைவா் பதவி தோ்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
ஜப்பானில் கொரோனா விவகாரத்தைக் கையாண்டதிலும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதாகவும் பிரதமா் யோஷிஹிடே சுகா மீது விமா்சனம் எழுந்தது. இந்த நிலையில் மேற்கண்ட முடிவை அவா் அறிவித்துள்ளாா்.
லிபரல் டெமோக்ராடிக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளன. செப். 29-ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தோ்தலில் யாா் வெற்றி பெறுவாரோ அவரே புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா்.
அந்த வகையில், கட்சித் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற முடிவின் மூலம் பிரதமா் பதவியிலிருந்து விலகவிருப்பதையும் யோஷிஹிடே சுகா உறுதிப்படுத்தியுள்ளாா்.