இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த பயணிகள் படகு: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்
இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று தொடர்பை இழந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
கிழக்கு ஜாவாவின் சுபராபாவில் இருந்து சனிக்கிழமை காலை 10.13 மணிக்கு விர்கோ டிரான்ஸ்போர்ட் 8(Virgo Transports 8) என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது.

390 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் 30 பணியாளர்கள் உட்பட 243 பேர் போர்னியோவின் தெற்கு கலிமந்தன்(Kalimantan) நகரான பஞ்சர்மாசினை(Banjarmasin) நோக்கி பயணம் செய்தனர்.
கப்பல் மோசமான வானிலையில் சிக்கி தொலை தொடர்பை இழந்த போது அந்த கப்பலின் கேப்டன் ஆபத்து செய்தி அனுப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதில், கடலில் அலைகள் 10 மீட்டர் வரை உயருவதாகவும், கப்பல் ஆபத்தான முறையில் ஒருபக்கமாக சாய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கப்பல் தலைகீழாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்பு பணிகள் மற்றும் உயிரிழப்பு
இந்த கப்பலில் பயணித்த 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 4 கடற்படை கப்பல்கள் உட்பட 8 மீட்புக் கப்பல்கள், 2 மீட்பு ஹெலிகாப்டர்கள், பஞ்சார்மாசினை தளமாக கொண்ட உள்ளூர் மீட்புக் குழுவினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கப்பல் விபத்து சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கப்பலில் பயணித்த நுற்றுக்கணக்கானவர்களில் 130 க்கும் மேற்பட்டோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |