சரவணவபவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கு நினைவிருக்கா? மீண்டும் லைம்லைட்டில் ஜீவஜோதி.. பரபரப்பு புகார்
தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் புகழ்பெற்ற சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, அதற்குத் தடையாக இருந்த சாந்தகுமாரை கொன்றதாக ராஜகோபால் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால், உடல்நலக் குறைவால் 2019-ல் உயிரிழந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது - நான், 2006ல், வேதாரண்யத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவரை மறுமணம் செய்து, மகனுடன் வசிக்கிறேன்.
ஜீவ ஜோதி
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடத்தப்படும் சேனல் ஒன்றில், 'சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கின் உண்மையே இதுதான்' என, பேட்டி ஒன்றை ஒளிபரப்பி உள்ளனர்.
இந்த சேனலுக்கு, 16 லட்சம் பேர் பார்வையாளராக உள்ளனர். என் வாழ்வில் நடந்த துயர சம்பவம் குறித்து, சென்னையைச் சேர்ந்த, இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி தடா ரஹீம், 52, என்பவர் பேட்டி அளித்துள்ளார்.
'பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த போது, என்னுடன் ராஜகோபாலும் அடைக்கப்பட்டார். அப்போது, திருமணத்திற்கு முன்பே, ஜீவஜோதிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. அறிவிக்கப்படாத கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
அப்படி இருக்கும்போது தான், பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து, ஜீவஜோதி ஓடிவிட்டார். இது ஜீவஜோதியின் பெற்றோருக்கு தெரியும் என ராஜகோபால் தன்னிடம் கூறியதாக, அந்த பேட்டியில் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
ஜீவ ஜோதி, ராஜகோபால்
மேலும், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தீர்ப்பளித்த பெண் நீதிபதி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார். என் பெண்மைக்கும், நடத்தைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராகவும், மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், தடா ரஹீம் பேச்சு உள்ளது.இவர் மீதும், உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் 'வீடியோ' வெளியிட்ட சேனல் நிர்வாகிகள், நெறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தடா ரஹீம்