ஒருபக்கம் ஏவுகணை சோதனை... மறுபக்கம் வெள்ளைக் கொடியுடன் வடகொரிய தலைவர்
சமீபத்தில் புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்து உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள வடகொரியா அண்டை நாட்டுடன் அமைதியை பேண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்தது.
ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவுடன் அமைதியை பேணும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வடகொரியாவிற்கு எதிரான தனது விரோதத்தை மறைக்க அமெரிக்கா மிகவும் தந்திரமான வழிகளை மட்டுமே பின்பற்றுவதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் மற்றும் முடக்கியுள்ள பிற சலுகைகளை பெற தென் கொரியாவின் உதவி வேண்டும் என்று கிம் ஜோங் விரும்புகிறார்.
இதனாலையே, தென் கொரியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க கிம் ஜோங் முயன்று வருகிறார். செவ்வாய்க்கிழமை புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை வடகொரியா முன்னெடுத்த நிலையில்,
வியாழக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் மன்ற பாதுகாப்பு கவுன்சிலின் அவசர உள் கூட்டத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளன.
ஒருபக்கம் ஏவுகணை சோதனைகளை முன்னெடுக்கும் கிம் ஜோங் உன், மறுபக்கம் தென் கொரியாவுடன் அமையை பேண விரும்புவது, அமெரிக்காவுடன் தென் கொரியாவின் நெருக்கமான உறவை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்காத வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை என்றே வடகொரியா தெரிவித்து வருகிறது.