தேர்தலில் 238 முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் போட்டி.., யார் இந்த சேலம் டயர் கடைக்காரர்?
நாடு முழுவதும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ள பத்மராஜன் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
238 முறை தோல்வி
தமிழக மாவட்டமான சேலம், மேட்டூரை சேர்ந்தவர் கே.பத்மராஜன் (65). இவர், கடந்த 1988 -ம் ஆண்டு முதல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
டயர் கடை உரிமையாளரான இவர் இதுவரை 238 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும், மனதை தளரவிடாமல் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இவர், தேர்தலில் நிற்கும் போது இவரை பலரும் கேலி செய்துள்ளார்கள். ஆனால், சாமானியன் கூட தேர்தலில் போட்டியிடலாம் என்பதை உணர்த்தவே இவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், எனக்கு பங்கேற்பதே வெற்றி தான். தேர்தலில் தோல்வி அடைவது எனக்கு மகிழ்ச்சி தான்" என்று கூறியுள்ளார்.
தர்மபுரி தொகுதியில் போட்டி
எலெக்சன் கிங் என அழைக்கப்படும் பத்மராஜன், குடியரசு தலைவர் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை போட்டியிட்டுள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
தற்போது தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பத்மராஜன் கூறுகையில், "எதிரில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. வெற்றி எனக்கு இரண்டாவது தான்.
கடந்த 30 ஆண்டுகளில் தேர்தலில் நிற்பதற்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளேன்" என்றார்.
இந்திய தேர்தலில் அதிக முறை தோல்வி அடைந்தவர் என்று Limca Book of Records -ல் பத்மராஜன் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 2011 -ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகளை பெற்றது தான் இவரது அதிகபட்ச வாக்குகளாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |