களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்! வெற்றிக்கோப்பையுடன் உடல் நல்லடக்கம்
கடலூரில் கபடி விளையாட்டின் போது உயிரிழந்த இளைஞர் விமல்ராஜின் உடல் பரிசுக் கோப்பையுடன் சேர்த்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மனடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில், விமல்ராஜ் என்ற 22 வயது இளைஞர் கலந்துகொண்டு விளையாடினார்.
போட்டியின்போது எதிர்பாராத விதமாக திடீரென மைதானத்திலேயே மயக்கமடைந்த விமல்ராஜ், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து விமல் ராஜின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமல்ராஜின் உடலுக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் இடுகாட்டில் புதைக்கப்பட்டது.
அப்போது விமல்ராஜ் கபடியில் வென்ற கோப்பையை அவரது நண்பர்கள் உடலுடன் வைத்து புதைத்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.