காபூல் விமான நிலைய தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது! அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் நிலை என்ன?
காபூல் விமான நிலையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில் குண்டு வெடிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் நிலை குறித்து தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் வாயிலில், இரண்டு இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே முதல் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில், விமானம் ஏற அமெரிக்கர்கள் காத்திருக்கும் பகுதியான பரோன் ஹோட்டல் கேட் அருகே அடுத்த குண்டு வெடித்தது. இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில், விமான நிலையத்தின் அருகில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 140 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காபூலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள கர்த்தே பர்வான் என்ற குருதுவாராவில் அவர்கள் அடைக்கலம் புகுந்திருந்த நிலையில் அவர்கள் உயிர் தப்பினர். குண்டு வெடித்த அதே இடத்தில் ஒருநாள் முன்னதாக அவர்கள் நின்றிருந்ததாக குருதுவாரா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கொடூர சம்பவம் ஒருநாள் முன்னதாக நடைபெற்றிருந்தால் இறந்திருப்போம் என்று அவர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.