ஆப்கானில் தலைவிரித்தாடும் முக்கிய பிரச்சனை... திண்டாடும் மக்கள்! உண்மையை போட்டுடைத்த மேயர்
பல ஆண்டுகளாக நடந்த மோதல், காலநிலை மாற்றம் மற்றும் மோசமான நீர் மேலாண்மையால் ஆப்கானிஸ்தானின் தலைநகரம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் தண்ணீர் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருவதால் நகர அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
நகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் என்ற கவலை உள்ளதாக காபூல் மேயர் ஹம்துல்லா நோமானி கூறியுள்ளார்.
பற்றாக்குறையைத் தீர்க்க குடிநீர் வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நோமனி கூறினார்.
சமீபத்தில், அதிகாரிகள் காபூலுக்கு தொலைதூரப் பகுதிகளில் இருந்து அதிக செலவில் தண்ணீர் கொண்டு வந்துள்ளனர்.
டஜன் கணக்கான மக்கள், பெரும்பாலும் குழந்தைகள், திங்களன்று காபூலில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியில் இருக்கும் கிணற்றில் இருந்து கேன்களை நிரப்ப காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
USAID-யின் கூற்றுப்படி, 42% ஆப்கானியர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது மற்றும் 27% கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதிகள் உள்ளன என தெரிவித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், ஒரு பெரிய பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காலப்போக்கில் வாய்ப்பு அதிகரிக்கும் என உலக உணவுத் திட்டத்தின்படி (WFP) எச்சரித்துள்ளது.