மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 5 பேர் சிறையிலடைப்பு! துப்பட்டாவால் முகத்தை மூடிய 2 ஆசிரியைகள்
ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். இவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது.
ஆனால் இதனை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் 5 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் 5 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் வேனில் அழைத்துச்செல்லப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது சாந்தி, ஹரிப்பிரியா உள்ளிட்டோர் தங்கள் முகத்தை சுடிதார் துப்பட்டாவால் மூடியபடி சென்றனர்.