மாணவி ஸ்ரீமதி வழக்கில் 2 ஆசிரியைகள், தாளாளர் உள்ளிட்ட ஐவர் கைது எதற்காக?
ஸ்ரீமதி வழக்கில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் கைது எதற்காக என நீதிமன்றம் கேள்வி கேட்டு எச்சரிக்கை.
வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் ஆசிரியைகள், தாளாளா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டது எதற்காக என கேள்வி கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார். இதுதொடர்பாக அவர் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த ஐவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டனர். அந்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை என தெரிவித்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஸ்ரீமதி பெற்றோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தங்கள் மகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தாா்.
அப்போது நீதிபதி, இந்த மனுதாரா்கள் என்ன குற்றம் செய்தாா்கள்? பள்ளியின் தாளாளா் மற்றும் ஆசிரியா்களாக இருப்பதற்காக கைது செய்யப்பட்டனரா? உள்ளிட்ட விவரங்களை அறிந்து வந்திருக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் மனுதாரா்கள் எதற்காக கைது செய்யப்பட்டனா் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.