கள்ளக்குறுச்சி மாணவி ஸ்ரீமதி இறுதிச்சடங்கு: காவல்துறை விடுத்த அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறுதிச்சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறுச்சி மாவட்டத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் ஸ்ரீமதி என்ற மாணவி மரணமடைந்தார். இவரது உடல் கடந்த 13ம் திகதியில் இருந்தே, பெற்றோர்களால் கைப்பற்றப்படாமல் கள்ளக்குறுச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டு உடற்கூறாய்வுகள் நடந்து முடிந்த நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் இன்று சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாளை காலை 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, நாளை மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் பெரியநெசலூரில் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவியின் இறுதிச் சடங்களில் வெளியூர் நபர்கள், அமைப்புகள் கலந்துகொள்ளக் கூடாது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஒலிப்ருக்கி மூலமாக காவல்துறை வேண்டுகோள்விடுத்துள்ளது.