கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு! ஆசிரியைகள் உட்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி ஆசிரியைகள் உட்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்க மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அத்துடன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசந்திரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஐவரும், தங்கள் வழக்கறிஞர் வாயிலாக தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சி.பி.சி.ஐ.டி பதிவு செய்துள்ள புதிய முதல் தகவல் அறிக்கை எண்ணுடன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஆகத்து 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.