புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் ஜனாதிபதி ஏன் கலந்துகொள்ள கூடாது - கமல்ஹாசன் அறிக்கை
இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா
டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை நாளை திறந்து வைக்க உள்ளார். ஜனாதிபதி அல்லாமல் பிரதமர் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் ஜனாதிபதி இல்லையென்றால் திறப்பு விழாவை புறக்கணிப்போம் எனவும் கூறினர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கை
அதில், 'புதிய நாடாளுமன்றத் திறப்பு அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய பெருமைமிகு தருணம். இந்த வரலாற்று தருணத்திற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறியுள்ளார்.
மேலும், திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்துகொள்ளக் கூடாது என்பதை பிரதமர் நாட்டிற்கு கூற வேண்டும் என்றும், அவர் ஏன் கலந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான காரணம் இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை பிரதமர் அழைக்க வேண்டும். அதுபோல் இவ்விழாவில் கலந்துகொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.