2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டி? தொகுதி மட்டும் தான் பெண்டிங்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக சார்பில் போட்டியா?
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். தமிழில் 2008-ம் ஆண்டு வெளியான தாம் தூம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், நாட்டில் நடைபெரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் பேசி வருபவர். குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவாகவும், நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும் இருப்பவர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கங்கானாவிடம் கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.
கடந்த 17 -ம் திகதி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
கங்கனாவின் தந்தை கூறியது
இந்நிலையில் கங்கனாவின் தந்தை அமர்தீப், "அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார்.ஆனால், எந்த தொகுதி என்பது மட்டும் உறுதியாகவில்லை" என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒத்து போகிறது" என்று தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |