பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் சுனில், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது 11 வயது மகன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அஸ்வின் செப்டம்பர் மாதம் 24-ஆம் திகதி பிற்பகல் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவா், குளிா்பானம் ஒன்றை கொடுத்துள்ளாா். அஸ்வின் அதை வாங்கி சிறிதளவு குடித்துள்ளாா்.
அன்று இரவே அவருக்கு காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பதறிப்போன தாயார் ஷோபியா, தனது மகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னா் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுவன் குடித்த குளிா்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினா். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக களியக்காவிளை பொலிஸில் புகாா் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சிறுவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் அதிர்ச்சியளிக்கும் விதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.