கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து இளம் பெண்ணிற்கு கத்தி குத்து: காதல் விவகாரமா என விசாரணை
பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளைஞர் ஒருவர் புகுந்து மாணவியை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜனகுண்டே பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வரும் லயசீதா என்ற 19 வயது மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோலார் மாவட்டத்தில் முலபாகல் அருகே காஜிபுரா கிராமத்தைச் சேர்ந்த லயசிதா(19), தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் லயசிதாவை கல்லூரியில் பார்க்க வந்த பவன் கல்யாண் என்ற இளைஞர், வகுப்பறையில் இருந்த லயசிதாவிடம் பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார், அப்போது பவன் கல்யாண் லயசிதா இடையே வாக்குவாதம் ஏற்படவே, பவன் கல்யாண் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லயசிதாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்.
பின் தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கல்லூரியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இருவரையும் சோதித்த மருத்துவர் லயசிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் பவன் கல்யாண் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
கத்தி குத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கல்லூரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இளைஞரின் இந்த வெறிச் செயலுக்கு தெளிவான காரணம் தெரியாத நிலையில், காதல் விவகாரத்தில் இந்த கொலை மற்றும் தற்கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
பவன் கல்யாண் மற்றும் லயசிதா இருவரும் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.