கோலியின் வீடியோவால்தான் கூட்டம் கூடியது - 11 பேர் உயிரிழப்பு வழக்கில் கர்நாடக அரசு அறிக்கை
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி அணி நிர்வாகம்தான் காரணம் என கர்நாடக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல்
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், முதல்முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது.
இதனை கொண்டாடும் வகையில், கடந்த ஜூன் 4 ஆம் திகதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனை பார்வையிட, லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே திரண்டதால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு அறிக்கை
இந்த அறிக்கையில், கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி அணி நிர்வாகம்தான் காரணம் என தெரிவித்துள்ளது.
வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
ஆனால், விராட் கோலி ரசிகர்களை நிகழ்வுக்கு அழைப்பது போன்ற வீடியோவை ஆர்சிபி அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. இந்த அழைப்பில் அனுமதி இலவசம் என கூறப்பட்டது. இந்த வீடியோ காரணமாகவே, லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சிறப்பு நுழைவு அட்டை இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால்தான் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு திடலுக்குள் செல்ல முயன்றனர்.
நுழைவு வாயில்களில் மோசமான திட்டமிடல் மற்றும் கேட்களை திறப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாகவே நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரசிகர்கள் கூடிய நிலையில், நிகழ்ச்சியை முழுவதுமாக ரத்து செய்தால், பெரியளவிலான வன்முறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், நிகழ்ச்சியை ரத்து செய்யாமல் நேரத்தை குறைத்து நடத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |