100க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் நிலத்தில் புதைப்பு? தர்மஸ்தலா வழக்கை விசாரிக்க SIT அமைப்பு
தர்மஸ்தலா வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தர்மஸ்தலா கொலை வழக்கு
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான புனித தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த கோவில் நிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்டதாக கோவிலின் முன்னாள் தூய்மை பணியாளர் அளித்த புகார் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
முன்னாள் ஊழியர் வாக்குமூலம்
கடந்த ஜூன் 3 ஆம் திகதி, ஆதரங்களுடன் மாநில அரசுக்கு கடிதம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மங்களூரு நீதிமன்றத்தில், கருப்பு துணியால் முழுவதும் தன்னை மறைத்து வந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில், 1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால், சிறுமிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அந்த பெண்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் என்னை மிரட்டிக் கட்டாயப்படுத்தினர்.
1998ஆம் ஆண்டு உடல்களை அடக்கம் செய்ய மறுத்த எனது மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரங்கள் என்னை பயத்தில் ஆழ்த்தியது. நானும் மறுத்த போது, என்னையும் எனது குடும்பத்தையும் கொன்று எரித்து விடுவோம் என்று மிரட்டியதால் அவர்கள் சொன்னபடி செய்தேன்.
சிறுமிகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்களை எனது கையால் அடக்கம் செய்துள்ளேன். அந்த குற்ற உணர்வு என்னை துரத்துகிறது.
தர்மஸ்தலா கோயில் நகரத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்களால் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, எனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்று பயந்து, நான் அண்டை மாநிலத்திற்கு தப்பிச் சென்றேன்.
எனக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த குற்றங்களைச் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன். அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் அடையாளம் காண்பிப்பேன். உடல்களை தோண்டி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக தெரிவித்தார்கள்.
இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன். இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை" என தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழு
இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து விசாரிக்க வேண்டுமென கர்நாடக அமைச்சர் சித்தராமையாவிடம் கர்நாடக பெண்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் புகார்கள், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |