அதானி குழுமத்திற்கு அடுத்த பேரிடி... ரூ 6200 கோடி ஒப்பந்தம் ஒன்றை மொத்தமாக ரத்து செய்த நாடு
இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம் கென்யாவில் முன்னெடுத்த ரூ 6200 கோடி ஒப்பந்தத்தை மொத்தமாக ரத்து செய்வதாக அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும்
ஏற்கனவே 265 மில்லியன் டொலர் லஞ்சமளிக்க ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலால் அதானி குழுமம் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது இன்னொரு பேரிடியாக 736 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றை கென்யா ரத்து செய்துள்ளது.
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தெரிவிக்கையில், அமெரிக்காவில் கெளதம் அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை இந்தியாவின் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கென்யாவில் மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கும் 30 ஆண்டுகளுக்கான 736 மில்லியன் டொலர் ( இந்திய மதிப்பில் ரூ 6218 கோடி) ஒப்பந்தம் ஒன்றையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தமானது கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துக்கும், எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்துக்கும் அதானி குழுமம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்யுமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
265 மில்லியன் டொலர் லஞ்சம்
மேலும், புலனாய்வு முகமைகள் மற்றும் நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த முடிவெடுத்துள்ளதாகவும் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு வெளியிட்டிருந்த தகவலில், கெளதம் அதானி மற்றும் 7 பேர்கள் கொண்ட குழு இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டொலர் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் அதானி குழுமம் மொத்தமாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |