மொத்தமாக 600 பேர்கள் வரையில் மாயம்: நடுங்கவைக்கும் பட்டினி வழிபாட்டில் புதிய தகவல்
கென்யாவில் பட்டினி வழிபாட்டில் மரணமடைந்ததாக கூறப்படும் விசுவாசிகளின் எண்ணிக்கை 201 என அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினியால் உருக்குலைந்து
சனிக்கிழமை, மேலும் 22 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையிலேயே இறப்பு எண்ணிக்கை 201 என அதிகரித்துள்ளது. பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உருக்குலைந்து காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
@AP
மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் விசுவாசிகள் என்றே கூறப்படுகிறது. தொடர்புடைய தேவாலயத்தின் போதகர் பால் மெக்கன்சி இந்த விவகாரம் தொடர்பில் கைதாகி விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இவரே, கடவுளை நேரிடையாக சந்திக்கும் பொருட்டு பட்டினி வழிபாட்டிற்கு திட்டம் வகுத்தவர். இந்த நிலையில், அந்த தேவாலயத்திற்கு தொடர்புடையவர்கள் என கூறப்படும் 600 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மெக்கன்சி மீது பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகள் பதியப்படும் என்றே அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர். சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த தேவாலயத்தில் டசின் கணக்கான சவக்குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு
தற்போது அந்த குழிகளை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமது தேவாலயத்தை 2019ல் மூடிவிட்டதாக மெக்கன்சி கூறி வருகிறார்.
@AP
இதனிடையே, கடந்த வாரம் 100 க்கும் மேற்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி, கழுத்தை நெரித்தல், மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாக உள்ளூர் பத்திகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.
போதகர் மெக்கன்சி மட்டுமின்றி, அவரது மனைவி உட்பட 16 சந்தேக நபர்கள் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.